அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை; திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


சென்னை: அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை, திமுக ஆட்சியில் அதானி நிருவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. பொய் தகவல்களை தொடர்ந்து பரப்புபவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு அமைந்த பிறகு, அதானி போன்று எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் இலக்குகளை அடைவதற்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும்.

இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை. இன்னும் சொல்ல போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான 5 நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 2015ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அன்று கையெழுத்திட்டது. அதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ7.01 என முடிவு செய்து, 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது. அதானி நிறுவனம் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ7.01 உரிமை கோரியது.

2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 2016ம் ஆண்டு செப்.18ம் தேதி 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது. 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது. மேலும் 2016ம் ஆண்டு மார்ச் 22ம் தேதிமுதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது.

ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை போலவே சூரிய ஒளி மின்சாரத்தை பெறுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024ம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதல்வர் சந்தித்ததாக கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை கொண்டு சென்று மக்களை திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

அதற்குள்தான் அதிமுக- பாஜ கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாக செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், அவரை சந்தித்தார் இந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நல்லாட்சி நடப்பதை பொறுத்துக்கொள்ள இயலாமல், அவரை சந்தித்தார், ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

The post அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை; திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: