அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்; உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் பெரியார், அம்பேத்கர் மண்ணில் நிறைவேறாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி


சென்னை: சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசால், தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. அந்த வாரியம் தொடங்கப்பட்டது முதல் 2021ம் ஆண்டுவரை 18 ஆயிரத்து 225 உறுப்பினர்கள் மட்டும்தான் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் எல்லாமே, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று நம்முடைய அரசால் அதற்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சத்து 6 ஆயிரத்து 775 உறுப்பினர்கள் இப்போது பதிவு செய்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 35 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் 90 சதவீதம் அரசு மானியத்துடன் ஆயிரம் வீடுகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன், திருவான்மியூரில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் நரிக்குறவர் – தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு முழு மானியத்துடன் தாட்கோ மூலமாக வீடு கட்டித் தரப் போகிறோம். சென்னை பெருநகரில் இருக்கும், கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 539 இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. புதிதாக 58 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் ரூ28 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த இயந்திரங்களை இயக்கவும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிக்கவும், 728 நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஆயிரத்து 489 ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, பணியாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் என்று 7 ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்படும். இந்த பணிகளுக்காக ரூ500 கோடியே 24 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத, புதுமை திட்டங்களை நாம் நிறைவேற்றுகிறோம். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடுகிறோம். ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ளாமல், தெரிந்திருந்தாலும், திட்டமிட்டு வதந்திகளை பரப்பி,

நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது; உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, ஒருபோதும் நிறைவேறாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது. பெரியாரும், அம்பேத்கருமே தாங்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டுதான் இலட்சிய பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்களின் கொள்கை வழி நடக்கும் நம்முடைய அரசும், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூகநீதி கொள்கையை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்.

இதுதான் பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் நாங்கள் எடுக்கும் உறுதிமொழி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், மேயர் பிரியா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், எம்பி, எம்எல்ஏக்கள், துணை மேயர் மகேஷ்குமார், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள்; உங்கள் மதவெறி – சாதி வெறி எண்ணம் பெரியார், அம்பேத்கர் மண்ணில் நிறைவேறாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: