அம்பேத்கர் நினைவு நாள் விழா ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

திருப்போரூர்: அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா வரவேற்றார்.

எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு வீட்டுமனை பட்டா, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, நலவாரிய அட்டை, அமுத சுரபி கடன், பண்ணை தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது, அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது தளபதி தலைமையில் நடைபெறும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் முதன்மையான அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் 368 தொழில் முனைவோர்களுக்கு 180 கோடியே 54 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் 5 வகையான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6648 பேருக்கு 315 கோடி ரூபாய் மானியத்துடன் ரூ.945 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 52 ஆயிரத்து 255 பயனாளிகளுக்கு ரூ.465 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த அரசாங்கத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், 8 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, 25 பேருக்கு இலவச தையல் இயந்திரம், 16 பேருக்கு சலவைப் பெட்டி, 20 பேருக்கு தூய்மைப்பணியாளர் நலவாரிய அட்டை, 15 பேருக்கு ஆதிதிராவிடர் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் கடன், 25 பேருக்கு அமுதசுரபி கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கடனுதவி, 84 பேருக்கு ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, 10 பேருக்கு குடும்ப அட்டை, 10 பேருக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சத்து 53 ஆயிரம் கடனுதவி, 6 பேருக்கு முருகமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், தாம்பரம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் அமைச்சர், மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் ஆகியோர் உணவு அருந்தும் சமபந்தி நடைபெற்றது. இந்நிகழ்வில், செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், மேலக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செங்கல்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஜீவிதா நன்றி கூறினார்.

The post அம்பேத்கர் நினைவு நாள் விழா ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: