முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம்

சென்னை: அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழைக் கம்பி வடம் மூலம் இணைத்து குறைந்த பட்சம் 1Gbps அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் “பாரத்நெட்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழில் முனைவோர் மற்றும் வலையமைப்புத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமையுடன் இந்த அரிய வாய்ப்பினை வழங்கி, தொழில் பங்கீட்டாளர்களாக தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ், கிராமப் பஞ்சாயத்துகளில், தொழில் பங்கீட்டாளர்கள் மூலம் குறைந்த விலையில் தரத்துடன் இணைய சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 960 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தொழில் பங்கீட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களுக்கு இணையான வளர்ச்சி பெறுவதற்கும், கல்வி, மருத்துவத்துறையில் பெரும் மாறுதல்களை உருவாக்குவதற்கும் வழிவகை செய்வதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் உறுதி செய்கிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இத்திட்டத்தில் பங்கேற்பதன் வாயிலாக அவர்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு இது வழிவகை செய்யும்.

எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின், “ஒவ்வொரு வீட்டிற்கும் இணையதள வசதி” என்ற குறிக்கோளே எய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்லக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும் மற்றும் பதிவு செய்வதற்கும் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: