விழுப்புரம், டிச. 4: பெஞ்சல் புயல் சூறையாடிய விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ₹1,500 கோடிக்கு வர்த்தகம் பாதித்துள்ளது. பெஞ்சல் புயல் கடந்த 30ம்தேதி இரவு கரையை கடந்தது. அப்போது பெய்த பேய் மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆற்றங்கரையோரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் தற்போதுவரை 250க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 13 ஆயிரம் ெஹக்டேர் நெல், சிறுதானிய பயிர்கள், வாழை சேதமடைந்துள்ளது.
இதுதவிர சுமார் 60 ஆயிரம் ஏக்கர் சவுக்குதோப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் 8 ஆயிரம் வீடுகளையும், மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 2 வாலிபர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 97 கால்நடைகள், கன்றுகளும், 56 வாத்துகள் மற்றும் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 10 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். 1,500 சிறுகுறு தொழில் நிறுவனங்கள் 5 நாட்களாக முடங்கி 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ₹850 கோடிக்கு வர்த்தகம் முடங்கியுள்ளது. இதேபோல் கட்டுமானம், வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட 1.5 லட்சம் பேர் வீட்டில் முடங்கி உள்ளனர். 3 ஆயிரம் மீனவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ெஹக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிசை, ஓடு வீடுகள் உள்பட மொத்தம் 350 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை மாவட்டத்தில் புயலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கடலூரில் மட்டும் 50 சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கஸ்டம்ஸ் சாலை சிறுகுறு நிறுவனத்தில் வெள்ளம் புகுந்ததால், ₹25 கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் தளவாட பொருட்கள் தண்ணீரில் சேதமாகியுள்ளன. நாள் ஒன்றுக்கு ₹10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமானம், மீன்பிடி தொழிலால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேர் தொடர்ந்து 5வது நாளாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் ₹500 கோடிக்குமேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான பண்ருட்டி முந்திரி தொழில் முடங்கி அங்கும் நாள் ஒன்றுக்கு ₹5 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது. சுமார் 100 கிமீ சாலைகள் மாவட்டத்தில் சேதமடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட் டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் 164 குடிசை மற்றும் ஓடு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 ஆடு, மாடுகள் சேதமடைந்துள்ளன. திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி டவுன் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழந்துள்ளது. நிவாரண முகாம்களில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1586 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிறுகுறு தொழில்கள் மற்றும் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ₹150 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதித்து 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். சுமார் 34,560 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
The post விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறையாடிய பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளில் 16 பேர் உயிரிழப்பு: ₹1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.