திருப்போரூர், மார்ச் 18: திருப்போரூரில், இன்ஸ்டாகிராம் காதலால் இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ வழக்கில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்போரூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணவரை இழந்து தனது இளம் வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த இளம்பெண் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் ஒன்றில் படித்து வந்தார். அப்பெண் பெரும்பாலும் செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண், வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது தாயார், இதுகுறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலை இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போன் ஆக்டிவேட் ஆனது. அப்போது கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை அடுத்த கிராமம் ஒன்றில் சிக்னல் காட்டியது. திருப்போரூர் போலீசார் அங்கு சென்று அப்பெண்ணை கண்டுபிடித்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் அப்பகுதி வாலிபர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி திருப்போரூர் வந்து அழைத்துச் சென்ற அந்த வாலிபருக்கு பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் தம்பி, தங்கையை அந்த வாலிபர் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். இதனால் செய்வதறியாது அந்த வீட்டிலேயே திருமணம் செய்யாமலும் எந்த முடிவும் எடுக்க முடியாமலும் அப்பெண் தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், இருவரையும் திருப்போரூர் அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்தனர். மேலும், இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபருக்கு 17 வயது ஆவதால் திருமணம் செய்ய முடியாது என்று அறிவுறுத்தி, அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்றோரை இழந்து விட்ட நிலையில் தம்பி, தங்கை இருவரையும் தனியே தவிக்க விட்டு வாலிபர் சிறைக்கு சென்றார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தம்பியும், தங்கையும் சொந்த ஊரில் தனித்து விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
