இந்துார்: ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத குஜராத் அதிரடி பேட்ஸ்மேன் உர்வில் பட்டேல் 40 பந்துகளுக்குள் 2வது முறையாக சதமடித்து டி20 வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் இந்துாரில் நடந்து வருகின்றன. திரிபுரா அணிக்கெதிராக கடந்த வாரம் நடந்த டி20 போட்டியில் குஜராத் துவக்க வீரராக களமிறங்கிய உர்வில் பட்டேல் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதமடித்து புதிய சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் இந்துாரில் நேற்று நடந்த போட்டியில் உத்தரகாண்ட் அணிக்கெதிராக குஜராத் அணி மோதியது.
முதலில் ஆடிய உத்தரகாண்ட் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. அதைத் தொடர்ந்து குஜராத்தின் துவக்க வீரராக களமிறங்கிய உர்வில் பட்டேல் ஆரம்பம் முதலே அசுரத்தனமாக பந்துகளை விளாசித் தள்ளினார். 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 100 ரன் குவித்தார். அதன் பின் தொடர்ந்து ஆடிய உர்வில் பட்டேல் அவுட் ஆகாமல் 41 பந்துகளில் 115 ரன் எடுத்தார். இதில் 11 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும். இதையடுத்து, 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து குஜராத் அணி அமோக வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியிலும் 36 பந்துகளில் சதமடித்துள்ள உர்வில் பட்டேல், டி20 போட்டியில் 40 பந்துகளுக்குள் 2வது முறையாக சதமடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிக்காக நடந்த ஏலத்தில் குஜராத் அணி, அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு உர்வில் பட்டேலை ஏலம் எடுத்தது. இருப்பினும், 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் உர்விலை ஏலம் எடுக்காமல் குஜராத் அணி அலட்சியம் காட்டியது. குஜராத்தின் முடிவு இமாலயத் தவறு என சுட்டிக் காட்டும் வகையில் உர்வில் பட்டேல் சாதனை சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஐபிஎல்லில் ஏலம் போகாதவர் சாதனை: 40 பந்துகளுக்குள் 2 சதம்; உர்வில் பட்டேல் ரன் வேட்டை appeared first on Dinakaran.