மும்பையை சேர்ந்த 26 வயது இளம் பெண், அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, கடந்த 19ம் தேதி ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், ‘நான் டெல்லி காவல்துறையில் பணியாற்றுவதாகவும், தற்போது சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் பண மோசடி வழக்கில் உங்களுக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம். உங்களை கைது செய்ய போகிறோம்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் பீதியடைந்த இளம்பெண், ‘தனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை, அவர் யார் என்றே எனக்கு தெரியாது’ என்று கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் வீடியோ காலில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள், அந்த பெண்ணை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும், யாரிடமும் தெரிவிக்காமல் ஓட்டலுக்கு சென்று தங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவரும் தங்கும் விடுதிக்கு சென்று தங்கினார். தொடர்ந்து வீடியோ காலில் அழைத்து அந்த நபர்கள், அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.78 லட்சத்தை பறித்துள்ளனர். மேலும் உடலில் அங்க அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என கூறி அந்த பெண்ணின் ஆடைகளை அகற்ற கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண், ஆடைகளை கழற்றினார்.
அடுத்த வினாடிகளில் வீடியோ கால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்த நபர்கள், அந்த பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மும்பை சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மும்பையில் சோதனை என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ஆடைகளை கழற்ற சொல்லி நிர்வாணமாக்கி பணம் பறிப்பு: கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.