டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கம். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

ஆனால் வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் பாஜ வென்றது. அக்டோபரில் அரியானா பேரவை தேர்தலுக்கு முன் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேராமல் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்” என இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், “நேற்று(நவ.30) டெல்லியில் பாதயாத்திரையின்போது என் மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பு இல்லாதது. ஆனால் அது ஆபத்தானதாக இருக்கலாம். கடந்த 35 நாட்களில் என் மீது நடத்தப்பட்ட 3வது தாக்குதல் இது. குண்டர்கள் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக புகார் தெரிவித்த ஆம் ஆத்மி பேரவை உறுப்பினர் நரேஷ் பல்யான் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் குற்றவாளிகளை விட புகார் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற செய்தியை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பி உள்ளார்” என்றார்.

The post டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: