புதுடெல்லி: காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரதமர் மோடி மீது ராகுல் கடுமையாக சாடினார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள். குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த போர் இன்று 13வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடர் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இப்போரால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயணிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இதனால் பிற நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இயற்கை எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு காஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாடு முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், அமெரிக்காவிடம் சரணடைந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்ததே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கடுமையாக சாடினர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது ராகுல்காந்தி கூறுகையில், ‘பீதியடைய தேவையில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் பிரதமரே முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக பீதியடைந்துள்ளார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் காரணமாக அவர் பீதியடைந்துள்ளார். அவரால் சபைக்குள் வர முடியவில்லை. அவரே பீதியடைந்திருக்கும்போது, நாட்டை பீதி அடைய வேண்டாம் என்று அவர் கூறுகிறார்’ என்றார்.
