ஊட்டி: ஊட்டியில் உள்ள கர்நாடக பூங்காவில் முதன் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக பூங்கா தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவை உள்ளன. இப்பூங்காக்களில் ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் பிரமாண்ட மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவைகள் நடத்தப்படுகிறது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக மாநிலம் தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் பகுதியில் பிரமாண்ட பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவில் செயற்கை நீருற்று, தொங்கும் பாலம், குளங்கள் போன்றவைகள் அமைக்கும் பணிகளும், பூங்காவை மேம்படுத்தும் பணிகளும் கடந்த 5 ஆண்டுக்கு மேலாக நடந்து வந்தது.
இந்நிலையில் பூங்கா மேம்படுத்தும் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில், முதன் முறையாக இந்த ஆண்டு மலர் கண்காட்சி நடத்த கர்நாடக மாநிலம் தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது பூங்காவில் பல லட்சம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பாத்திகளில் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. மலர் கண்காட்சிக்கான பணிகளை தற்போது பூங்கா நிர்வாகம் முழு வேகத்துடன் மேற்கொண்டு வருகிறது. இம்மாதம் (டிசம்பர்) மாதம் 20ம் தேதிக்கு மேல் மலர் கண்காட்சி துவங்கி 10 நாட்கள் நடத்தவும் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த மலர் கண்காட்சியை துவக்கி வைக்க கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரையும் அழைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆயுத்த பணிகளும் தற்போது இங்கு வேகமாக நடந்து வருகிறது. பொதுவாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இதுவரை மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை நடத்தி வந்தது. ஆனால், முதன் முறையாக டிசம்பர் மாதத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கர்நாடக தோட்டக்கலைத்துறை முதல் முறையாக மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு ஒரு கலர் புல் விருந்தாக அமையும்.
The post கர்நாடக மாநில பூங்காவில் முதன்முறையாக டிசம்பர் இறுதியில் மலர் கண்காட்சி: ஆயுத்த பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.