ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளது: தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை: நேற்று இரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் இன்றும் மழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம் படிப்படியாக உட்புறம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில், ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் உள்ளது.

தற்போதைய சூழலில் ஃபெஞ்சல் புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்து வரும் 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும். இதுவரை கிடைத்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிகக் கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும், புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியில் இதற்கு முன்பு அக்டோபர் 31, 2004 அன்று 21 செ.மீ மழை பதிவானது. தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமான மழை பதிவாகி இருப்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வானிலை எச்சரிக்கைகள் தொடரும். வானிலை நிலவரம் தொடர்ந்து கவனிக்கப்பட்டு அடுத்தகட்ட அப்டேட்கள் அறிவிக்கப்படும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

The post ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளது: தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: