கூடலூர்: குமுளி அருகே, புலி தாக்கி 2 ஆடுகள் பலியானாதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி ஊராட்சியில் உள்ள அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் புலிக்கால் ஜேக்கப். இவர் நேற்று முன்தினம் இரவு தான் வளர்க்கும் ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கொட்டகை அருகே 2 ஆடுகள் இறந்து கிடந்தன. ஒரு ஆடு காயம் அடைந்து கிடந்தது. புலி வந்து சென்ற தடங்கள் பதிவாகி இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜேக்கப், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தடங்களை ஆய்வு செய்து புலியால் ஆடுகள் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். மேலும், ஆடுகளின் இறைச்சியை தின்ன மீண்டும் புலி வரும் என, அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்களை பொருத்தினர். ஏற்கனவே இப்பகுதியில் முயல் மற்றும் நாயை புலி பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பெரியாறு வனப்பகுதியில் இருந்து புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அமராவதி குடியிருப்பு பகுதிக்கு வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புலி தாக்கி 2 ஆடுகள் பலி: குமுளி அருகே பொதுமக்கள் கிலி appeared first on Dinakaran.