1. யானைகள் உறுதியான மண் அல்லது புல் தரையில் நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலையுடன் மிகவும் கடினமான தரைதளம் இல்லாமல் இருப்பது நல்லது. சரியான கால் பராமரிப்புக்காக டெதரிங் பகுதியில் மண் மற்றும் மணல் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு யானைக்கும் இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் கூடிய கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும். குறைந்தபட்ச தரை பரப்பளவு மற்றும் 9 மீட்டர் x 6 மீட்டர் x 6 மீட்டர் உயரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
3. யானையுடைய பாதம், நகக்கண், தந்தங்கள் வெளிவரும் பாகங்கள் மற்றும் பிறப்புறுப்பில் முறையாக தோக்காமல்லி எண்ணையிட்டு” (Decamalli Oll) பராமரிக்க வேண்டும்.
4. யானையின் எடை மற்றும் வயதுக்கு ஏற்றவாறு உணவு வழங்கப்பட வேண்டும். உணவளிக்கும் முறை கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. யானையின் தேவைக்கிணங்க உள்ளூரிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உணவு வழங்கப்பட வேண்டும். புல் மற்றும் பச்சை இலைத் தழைகள் அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
5. வெப்பம் அதிகமாவதற்கு முன்னர், Musth காலங்கள் தொடங்குவதற்கு முன்னர், கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உணவு முறை மாற்றப்பட வேண்டும்.
6. யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது அல்லது Musth காலங்களின் போதோ. அதனை சங்கிலியால் உறுதியாக பிணைத்து, அதற்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைக்க வேண்டும். யானைப்பாகன் யானையை அணுகுவதை தவிர்க்க வேண்டும்.
7. பக்தர்கள் மற்றும் மது அருந்தியவரை யானையின் அருகில் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. ஆபத்தை விளைவிக்கும் எவ்வித செயல்பாடுகளையும் யானையிடம் செய்வதை அனுமதிக்க கூடாது.
8. யானைகளை புகைப்படம் எடுப்பது யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
9. உணவு அல்லது பணத்திற்காக பிச்சை எடுக்க யானையை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
10. திருக்கோயிலில் பராமரிக்கப்படும் யானை நிழல் அமைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
11. யானைகள் நிறுத்தி வைக்கப்படும் தரைப் பகுதிகள் சமமாக மிருதுவாக இருக்க வேண்டும் என்பதால் யானை கட்டும் இடத்தில் மணல் தரை அல்லது மிருதுவான மண் தரை இருக்க வேண்டும். யானை கட்டும் இடத்தில் மணல் அல்லது மண் சமமாக பரப்பி அதன் மீது நிறுத்தப்பட வேண்டும் அல்லது சமமான புல் தரையில் நிறுத்தலாம்.
12. யானை தங்கும் இடம் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். யானையின் சிறுநீரில், யானை நீண்ட நேரம் நின்றால், அதன் கால்களில் நோய் பாதிப்பு ஏற்படும். ஆகவே, சிறுநீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் மற்றும் நீர் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
13. இரவு நேரங்களில் படுப்பதற்கு சமமான மிருதுவான மணல் அல்லது மண் பரப்பிய தரையில் படுக்க வைக்கப்பட வேண்டும்.
14. யானையை வாரத்திற்கு குறைந்தது 4 முறையேனும் குளிப்பாட்ட வேண்டும். கோடைக்காலத்தில் தினமும் குளிப்பாட்ட வேண்டும். யானையை குளிப்பாட்டும் பொழுது, முதன்மையான யானைப்பாகன் உடனிருந்து முன்புறம் குளிப்பாட்ட வேண்டும். அவ்வாறு குளிப்பாட்டும் பொழுது தேங்காய் மட்டை, கைக்கு அடக்கமான மிருதுவான செங்கல் வைத்து நன்றாக யானையின் உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அப்பொழுதுதான் யானையின் உடம்பின் தோல் பகுதியில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். மேலும் யானைக்கு யானைப்பாகன் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டு யானைப்பாகனின் உத்தரவிற்கு கீழ்படிந்து நடக்கும். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குளிப்பாட்ட வேண்டும்.
15. சாதாரணமான ஒரு யானையின் எடையில் 5% எடையளவு உணவு வழங்கப்பட வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள யானை வைத்தியத்தில் அனுபவமுள்ள மருத்துவரை (Veterinary Doctor) அணுகி அவர் பரிந்துரைக்கும் அளவிற்கு சமைக்கப்பட்ட சாதம், பருப்பு வகைகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் தேவையான அளவு தென்னை மட்டைகள், பச்சை புல், உணவாக கொடுக்கப்பட வேண்டும். யானை பலகீனமாக இருப்பின் மருத்துவர் ஆலோசனைப்படி உணவின் அளவினை உயர்த்தி கொடுக்கலாம்.
16. யானைகள் பராமரிப்புக்கென ஒரு பதிவேடு (Log Book) பராமரிக்கப்பட வேண்டும். அதில்
(அ) யானை உட்கொள்ளும் வழக்கமான உணவின் அளவுகள் குறிக்கப்பட வேண்டும்.
(ஆ) வழக்கமான மருத்துவர் வந்து பராமரித்து வழங்கப்படும் அறிவுரைகள், மருந்துகள், நோய் ஏதேனும் இருப்பின் அதன் தன்மை போன்ற விபரங்கள் குறிக்கப்பட வேண்டும்.
(இ) இனப்பெருக்க காலங்களில் Heat Period (or) Musth Period என்று சொல்லப்படும் காலங்களில் வெப்பம் அதிகமாக தரும்பொழுதும் அல்லது குணநலன்கள் மாறும்போதும் (Behaviour changes) ஏற்படும் மாற்றங்கள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட வேண்டும்.
(ஈ) நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள யானைகளுக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தேதியில் Musth ஏற்படும். எனவே, அந்த தேதியை யானை பராமரிப்பு பதிவேட்டில் குறித்து வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(உ) Musth பிடிக்க ஆரம்பம் ஆகும் தேதிக்கு 21 நாட்களுக்கு முன்பு பட்டியலில் குறிப்பிட்டபடி உணவுகள் மாற்றி வழங்கப்பட வேண்டும்.
(1) குறிப்பிட்ட Musth Period காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முதன்மைப் பாகன் கூடிய வரை இந்த பருவகாலங்களில் பானையின் அருகில் செல்வதையே தவிர்க்க வேண்டும்.
(எ) யானை இந்த காலத்தில் சரியானபடி கால்களில் கட்டப்பட்டு, உறுதியான கற்களில் கட்டப்பட வேண்டும்.
(ஏ) இந்த காலங்களில் வாழை மட்டை அதிகமாக கொடுக்கப்பட வேண்டும். சுமார் மூன்று மாதங்களுக்கு இவ்வாறு இருக்க வேண்டும்.
(ஒ) இனப்பெருக்க காலம் Heat Period (or) Musth Period ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏற்படுவதால் முன் எச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஓ) இந்த காலங்களில் உணவு வகைகள் மருத்துவ ஆலோசனைப்படி வழங்க வேண்டும்.
17. யானைகளுக்கு Musth Period ஆரம்பிக்கும் முன்பு Deworming Medicine உரிய மருத்துவரை கலந்து ஆலோசித்து கொடுக்க வேண்டும் அதாவது கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் குடற்புழு நீக்க மருந்தினை வழங்க வேண்டும்.
18. யானைப்பாகன் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
19. யானைகள் காப்பீடு (Insurance) செய்யப்பட்டிருக்க வேண்டும். (Death cover insurance policy. Accident arriving out of Elephant cover for temple employees including Mahout and Third Party)
20.பொதுவாக யானைகள் உள்ள திருக்கோயில்களில் திருவிழா மற்றும் சுவாமி புறப்பாடு செய்யும் விசேஷ தினங்களில், யானைகளை ஊர்வலத்தில் கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது. அவ்விதம் ஊர்வலத்தில் கொண்டு செல்லும்பொழுது, யானைகளை திருக்கோயில் அல்லாத பிற பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கூடாது. பொதுமக்களிடம் காசுகள் பெறுவதையோ அல்லது பொது மக்களை ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்கக்கூடாது. சுவாமி புறப்பாடு முடிவடைந்தவுடன், திருக்கோயிலில் அதன் இருப்பிடத்திற்கு கூட்டிச்சென்று முறையாக பராமரிக்கப்பட வேண்டும். வெயில் அதிகரிக்கும் முன் யானை அதன் பராமரிக்கப்படும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட வேண்டும். வெயிற்காலத்தில் யானைக்கு எவ்வித அசௌகரியமின்றி இருக்க கூடாரம் போன்ற தகுந்த நிழல் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
21. யானைகள் இல்லாத திருக்கோயில்களில், திருவிழா அல்லது பிற விசேட தினங்களை முன்னிட்டு, தனியார் நபர்களிடமிருந்து யானைகளை பெற்று பயன்படுத்தக்கூடாது. தனியாரால் பராமரிக்கப்படும் யானைகளை அவர்கள் சுயநோக்கோடு பயன்படுத்துவதன் மூலம் திருக்கோயிலின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்பட காரணமாக அமைகிறது. ஆகவே. யானைகளை வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ பெற்று திருக்கோயில் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.
22.காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய முறையான இடவசதி வழங்கப்பட வேண்டும்.
23. சிமெண்ட்டினால் ஆன கூரை மற்றும் பனை ஓலையினால் கூரையினை பயன்படுத்தக்கூடாது. யானைத் தொழுவத்தின் கூரைக்கு நெளிந்த இரும்புத் தாள்கள் அல்லது கல்நார் பயன்படுத்தக் கூடாது. யானைக்கு ஒதுக்கப்பட்ட முற்றம் மரங்கள் அல்லது மரங்கள் நடப்பட்டதாக இருக்க வேண்டும்.
24.யானைகளை இயற்கையாக அமைந்துள்ள நீர் நிலைகள், தொட்டி குளியல் (Bath tub). பூவானி குளியல் (Shower bath), ஆழ்குழாய் கிணற்று நீர் குளியல் (Borewell Bath) மற்றும் குழாய்களுடன் கூடிய விசை எந்திரம் பொருத்தப்பட்டதன் மூலம் பெறப்படும் நீரில் குளியல் (Motor & Hose Pipes) மேற்கொள்ள வேண்டும். இவை சாத்தியப்படாத இடங்களில் தொட்டிக்குளியல்(Bath tub) சாலச்சிறந்தது.
25.அனைத்து பக்கங்களிலும் மென்மையான சாய்வுடன் குறைந்தபட்ச அளவு 10 மீட்டர் × 10 மீட்டர் x 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை குளியல் குளம் இருக்க வேண்டும். யானை குளிக்கும்போது மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் குளிக்கும் குளத்தில் வைக்க வேண்டும்.
26.ஒவ்வொரு யானைக்கும் தேவையான அளவு பல்வேறு வகைகளுடன் கூடிய ஆரோக்கியமான தீவனத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தபடி பசுந்தீவனங்கள் (ஆல், அத்தி, அரசு, தென்னை, கூந்தப்பனை, சோளத்தட்டு, கரும்புசோகை, நாணல், புல் வகைகள். மூங்கில்) சரிவிகித அளவில் அளிக்கப்பட வேண்டும்.
27.யானை உடலின் மொத்த எடையில் 5 சதவீதம் பனை ஓலை/தென்னை ஓலை மற்றும் பச்சைபுல் (Hybrid napier) தினசரி உணவாக அளிக்கப்பட வேண்டும். வளரும் யானைகள் மற்றும் உடல் தெம்பில்லா யானைகளுக்கு 50 கிலோ பனை ஓலை மற்றும் பச்சைபுல் கூடுதலாக வழங்கலாம்.
28.பல் சொத்தை இருக்கும் யானைகளுக்கு சிறிய அளவு வாழைத்தண்டு அளிக்கலாம்.
29.யானைக்கு போதுமான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.
30. யானைகள் மழையில் அலைவதை விரும்புகின்றன. யானைகள் நீச்சல் திறன் கொண்டவை.
31. யானைகள் இனப்பெருக்க நிலையில் இருக்கும்போது நடத்தை மாறுகிறது. குறிப்பாக. கீழ்ப்படியாமையுடன் கூடிய ஆக்ரோஷமான நடத்தை யானைகளிடம் காணப்படுகிறது.
32.வான வேடிக்கைகள், மிகுந்த ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பயன்படுத்தும் இடம். பட்டாசுகளின் வெடி சத்தம் உள்ள இடங்களுக்கு யானைகளை அழைத்து செல்லக்கூடாது. வாலை பிடித்து இழுப்பது. யானைகளின் மீதுள்ள முடியினை பறித்தல் போன்ற யானைகளுக்கு எரிச்சலூட்டும் செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது.
33.மின்சாதனங்கள், மின்கம்பிகள், மின் இணைப்புகள் உள்ள பகுதிகளின் அருகில் யானைகளை கண்டிப்பாக அழைத்துச் செல்ல கூடாது.
34.நன்கு புதைக்கப்பட்ட தும்பிக்கை காரணமாக, யானைகள் தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர முடிகிறது. மேலும், தும்பிக்கை மூலம் வாசனை திறன் மிகவும் தனித்துவமானது. வாசனை திரவியங்களை பயன்படுத்துவோர் யானையின் அருகில் செல்லக்கூடாது.
35.அபாயத்தில் உள்ள யானைகள் காதுகள் பரவுதல், சீறல் ஒலி எழுப்புதல், உடனடி உந்துதல், முன்னோக்கி நகர்த்துதல், அலறல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.
36. யானைகளின் வயது, எடை, உடற்தகுதியை பொறுத்து தினமும் இருவேளை 5 முதல் 10 கிலோ மீட்டருக்கு குறையாமல் நடைப்பயிற்சி அளிக்க வேண்டும்.
37.திருக்கோயில்களில் யானைகளை பராமரிப்பதற்கும். உடமையில் வைத்திருக்கவும் உரிய Ownership Certificate வனத்துறையிடம் பெற்றிருத்தல் வேண்டும்.
38. Ownership Certificate பெறாதவர்கள் உரிய முறையில் வனத்துறைக்கு விண்ணப்பித்து உரிய சான்று பெற வேண்டும்.
39.Ownership Certificate -ஐ ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் வேண்டும். மேலும் Tamil Nadu Captive Elephant (Management and Maintenance) Rules 2011- கண்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை சார்நிலை அலுவலர்கள் தொடர்புடைய அனைத்து திருக்கோயிலின் யானை பாகன்களுக்கும் வழங்கி ஒப்புதலை பெறவும் அவற்றை பின்பற்றுதலை தவறாது கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The post தமிழ்நாட்டில் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக 39 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அறநிலையத்துறை appeared first on Dinakaran.