புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு; அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் இன்று (28.11.2024) நடைபெற்ற அருள்மிகு பங்கஜாம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பவானி சுப்பராயன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள், இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

புரசைவாக்கம் அருள்மிகு பங்கஜாம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோயில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இத்திருக்கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்திட ரூ.4.82 கோடி செலவில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் திருக்கோயில் நிதியின் மூலம் ரூ.2.92 கோடி செலவில் 14 திருப்பணிகளும், உபயதாரர்கள் மூலம் ரூ.1.90 கோடி செலவில் 22 திருப்பணிகளும் நடைபெற்றுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.29 கோடி செலவில் திருக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்ய பணிகள் தொடங்கப்பட்டு அதில் ரூ.30 லட்சம் செலவில் தங்கத்தேருக்கான மரத்தேர் திருப்பணி நிறைவுற்றுள்ளது.

மேலும், ரூ.81 லட்சம் செலவில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (28.11.2024) அருள்மிகு பங்கஜாம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோயிலுக்கு வேத மந்திரங்கள் முழங்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,322 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

இன்று மட்டும் சென்னை, புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிங்க பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆவராணி, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என 3 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆப., இணை ஆணையர்கள் திரு.ச.இலட்சுமணன், ஜெ.முல்லை, பெ.க.கவெனிதா, துணை ஆணையர் திரு.ஆர்.ஹரிஹரன், உதவி ஆணையர்கள் திரு.கே. சிவக்குமார், திரு.கி.பாரதிராஜா, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் பெ.வெற்றிக்குமார், திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் திரு.சா.இராமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு; அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: