புதுக்கோட்டை, நவ.27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் சார்பில், நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த இருவார விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியை, மாவட்ட கலெக்டர் அருணா, கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் அருணா தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், குடும்பநலத்துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்ட குடும்பநலச் செயலகத்தின் மூலம் நவீன வாசக்டமி (ஆண்களுக்கான குடும்பநல முறை) ஆண் கருத்தடை சிகிச்சை இருவார விழா விழிப்புணர்வு பிரச்சாரம் 21.11.2024 முதல் 4.12.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 21.11.2024 முதல் 27.11.2024 வரை விழிப்புணர்வு வாரமாகவும், 28.11.2024 முதல் 4.12.2024 வரை சேவை அளிக்கும் வாரமாகவும் அனுசரிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில், நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த இருவார விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.
அதன்படி ஆண் கருத்தடை சிகிச்சை முகாம், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருமயம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தினந்தோறும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு அரசின் ஈட்டுத்தொகையாக ரூ.1100-ம், ஊக்குவிப்போருக்கு ஊக்கத்தொகையாக ரூ.200-ம் வழங்கப்பட உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் விருப்பமுள்ள ஆண்கள் இம்முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள 94438 34622, 94431 20105 என்ற அலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரியா தேன்மொழி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) கோமதி, மற்றும் மாவட்ட குடும்பநலச் செயலகப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டையில் நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி; கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.