பெண்ணுக்கு ‘கள்’ வாங்கி ெகாடுத்து கட்டையால் அடித்து கொலை: ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை

திருமலை: பெண்ணை உறவினர் வீட்டுக்கு செல்லலாம் எனக்கூறி அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். அரசு பஸ்சின் இலவச டிக்கெட் மூலம் அவர் சிக்கினார். தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் பகதூர்பள்ளியில் கடந்த 14ம்தேதி பெண் ஒருவர் தலையில் படுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் துண்டிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் தெலங்கானா அரசு பஸ்சில் வந்து காந்திமைசம்மா பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அவருடன் மற்றொரு பெண்ணும் இறங்கினார். இந்நிலையில் கொலையான பெண்ணிடம் இருந்து தெலங்கானா அரசு பஸ்சில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய வழங்கப்பட்ட டிக்கெட் இருந்தது. இவ்வாறு டிக்கெட் பெற ஆதார் கார்டு எண் வழங்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்த போலீசார் அதன்பேரில் விசாரணை நடத்தினர்.

அதில் கொலையான பெண் நிஜாமாபாத்தில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இறந்த பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் பஸ்ஸில் ஏறி காந்திசைம்மா பஸ் நிறுத்தத்தில் ஒன்றாக இறங்கியதையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலையானவர் நிஜாமாபாத் மாவட்டம் பன்சுவாடாவைச் சேர்ந்த அஞ்சம்மா (50) என்பதும், அவருடன் வந்த மற்றொரு பெண் அதே பகுதியைச் சேர்ந்த கங்காமணி (30) என்பதும் தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அஞ்சம்மா கழுத்தில் இருந்த நகைக்கு ஆசைப்பட்ட கங்காமணி, தங்களுடைய உறவினர் வீட்டுக்கு சென்று வருவோம் என்று அஞ்சம்மாவை நிஜாமாபாத்தில் இருந்து பஸ்சில் அழைத்துச் சென்றுள்ளார். காந்திமைசம்மா பஸ் நிறுத்தத்தில் இறங்கியபிறகு அஞ்சம்மாவுக்கு கங்காமணி ‘கள்’ வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். பின்னர் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகதூர்பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் அஞ்சம்மாவை அடித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காமணியை நேற்று கைது செய்து அஞ்சம்மாவின் நகைகளை பறிமுதல் செய்தனர். கங்கம்மா மீது நிஜாமாபாத்தில் பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணுக்கு ‘கள்’ வாங்கி ெகாடுத்து கட்டையால் அடித்து கொலை: ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: