போதை ஊசி செலுத்திய இளைஞர் போலீஸ் விசாரணையில் மர்ம சாவு: 204 போதை மாத்திரை பறிமுதல்; 10 பேரிடம் தீவிர விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போதை ஊசி செலுத்திய 11 பேர்களை விசாரணைக்காக தனிப்படை போலீசுார் அழைத்துச் சென்றபோது, இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை நகர் பகுதியில் போதை ஊசி விற்பதாகவும், இதற்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு நகர் முழுவதும் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கோட்டை பெரியார் நகர் வினோஜன் (36), பாண்டி(29) அரிமளம் யாகுப்ஸ்டாலின்(21), கலீப்நகர் ஜபீர் (21), மாலையிடு பாலாஜி(21), பெரியார்நகர் சபரிவாசன்(20), அரவிந்த்(22), உசிலம்குளம் ரமேஷ்(36), அன்னசத்திரம் ஆனந்த்(36), கொசலகுடி வடிவேல்(30), சாந்த நாதபுரம் 7ம் வீதி சுப்ரமணியன் மகன் விக்னேஷ்வரன் (36) ஆகிய 11 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 204 போதை மாத்திரை, 10 ஊசி, 11 செல்போன், 6 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலில் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது விக்னேஷ்வரனுக்கு பல்ஸ் குறைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு விக்னேஷ்வரனின் உறவினர்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு போதை ஊசி செலுத்தியதற்காக விசாரணைக்கு அழைத்துச் சென்ற விக்னேஷ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ்வரனுக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் போதை ஊசி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 10 பேரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post போதை ஊசி செலுத்திய இளைஞர் போலீஸ் விசாரணையில் மர்ம சாவு: 204 போதை மாத்திரை பறிமுதல்; 10 பேரிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: