சர்வதேச கேரம் போர்டு போட்டியில் 3 தங்க பதக்கங்கள் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு: காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி

திருவொற்றியூர்: அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கேரம் போர்டு உலக சாம்பியன் போட்டியில், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காசிமா(17), மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளில் விளையாடி 3 தங்க பதக்கங்களை வென்றார். அங்கிருந்து சென்னை திரும்பிய சிறுமி காசிமாவை, ராயபுரம் பகுதியில் அவரது உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் மேள தாளங்களோடு வரவேற்றனர். பின்னர், காசிமாவுக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.

எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மருது கணேஷ், பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். இதேபோல், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க காசிமாவை வரவேற்றார்.

பின்னர், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவியை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காசிமாவுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டனர். காசிமா இந்த போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.5 லட்சம் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.

The post சர்வதேச கேரம் போர்டு போட்டியில் 3 தங்க பதக்கங்கள் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு: காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: