திருவண்ணாமலை, நவ.17: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் டானியல் ஜெயசிங் தெரிவித்தார். திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சு.பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபு, ஊரக வளர்ச்சித்துறை மாநில செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகிகள் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்(பொறுப்பு) டானியல் ஜெயசிங் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடுகள் நடந்துவருகிறது. அடுத்த மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் தூத்துக்குடியில் மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அப்போது, முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும்.
4.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. படித்து வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியிருக்கிறது. அவுட் சோர்சிங் முறை வேகமாக புகுத்தப்படுகிறது. அதை ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு கண்ணியமான வேலை, நியாயமான ஊதியம், ஓய்வுபெறும் காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 2003ல் இருந்து போராடி வருகிறோம். கடந்த ஆட்சியிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஆனால், அன்றைய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாராக இல்லை. அப்ேபாது, எங்களுக்கு ஆதரவாக பேசியதோடு, திமுக தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எனவே, எங்களுடைய மாநில மாநாட்டுக்கு முன்பாக கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கடந்த ஆட்சியில் பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்: திருவண்ணாமலையில் சங்க மாநில தலைவர் பேட்டி appeared first on Dinakaran.