3000 ஆண்டிற்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தின் பொக்கிஷம்: பொருநை அருங்காட்சியகம்; ஏப்ரல் மாதம் திறக்க திட்டம்

* ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என 3 வளாகங்களுடன் அமைகிறது

மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி ஸ்ரீவைகுண்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் வங்கக்கடலில் கலக்கிறது தாமிரபரணி. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித நாகரிகம் வாழ்ந்ததற்கு அடையாளமான சான்றுகள் கிடைத்துள்ளன.

திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868ல் ஆராய்ச்சியை தொடங்கியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-ல் இங்கு இனப் பகுப்பாய்வு செய்து, இங்கு கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை எடுத்து சென்றுள்ளனர்.

1900-ல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்சாண்டர் ரீ என்பவர் தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார். 1902ல் இருந்து 1904 வரை ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்தது அலெக்சாண்டர் ரீ தான். ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார்.
முதன் முறையாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரிகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் இருந்தன.

மீண்டும் 2004ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை முனைவர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் குழுவினரை அமைத்து அகழ்வாய்வு நடத்தியது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்த முடிவுகளை 2019 ஏப்ரல் 4ம் தேதி ஒன்றிய அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. கார்பன் பரிசோதனை முடிவுகளில் அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்ததில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர், இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் கொற்கையை தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது ஒரு முக்கியமான பண்பாட்டு சிறப்பு மிக்க இடமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், மூன்றாம் தமிழ் சங்க காலத்தை சார்ந்த சங்க இலக்கியங்களில், ஆதிச்ச நல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை.

ஆனால், கொற்கை பற்றி உள்ளது. திருச்செந்தூர், பொதிகை மலையைப் பற்றியெல்லாம் குறிப்புகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றி, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம். எனவே, சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகமாக இந்த ஆதிச்ச நல்லூர் நாகரிகம் கருதப்படுகிறது. அதற்கு உறுதியாக, 2004-2005 ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு நடந்தபோது கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் இவை சுமார் கிமு 1,700 ஆண்டுகளுக்கு முந்தியவை, அதாவது இன்றைக்கு 3,700 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகமாக இந்த நாகரிகம் உள்ளது. இதேபோல கொற்கை, சிவகளையிலும் அகழாய்வு நடத்தப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தமிழர்களின் வாழ்விட பொக்கிஷமாக விளங்கிய கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், தமிழர்களின் நாகரிகங்களை கண்டுகளிக்கும் வகையில் அங்கு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போல ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய பகுதிகளிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து 13 ஏக்கர் பரப்பளவில் நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக கடந்த ஆண்டு மே 18ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளன. அதாவது அருங்காட்சியகத்தில் நிர்வாக பிரிவு தரைதளம் 5ஆயிரத்து 566 சதுர அடியிலும், முதல்தளம் 5 ஆயிரத்து 393 சதுர அடியிலும், சிவகளை கட்டடப் பிரிவு தரைதளம் 6 ஆயிரத்து 68 சதுர அடியிலும், முதல்தளம் 2 ஆயிரத்து 923 சதுர அடியிலும், ஆதிச்சநல்லூர் கட்டட முதல் பிரிவு தரைதளம் 5 ஆயிரத்து 97 சதுர அடியிலும், முதல் தளம் 4 ஆயிரத்து 271 சதுர அடியிலும், ஆதிச்சநல்லூர் கட்டட இரண்டாம் பிரிவு தரைதளம் 3 ஆயிரத்து 509 சதுர அடியிலும்,

முதல் தளம் 3 ஆயிரத்து 509 சதுர அடியிலும், கொற்கை கட்டட முதல் பிரிவு தரைதளம் 7 ஆயிரத்து 624 சதுர அடியிலும், முதல் தளம் 5238 சதுர அடியிலும், கொற்கை கட்டட இரண்டாம் பிரிவு தரைதளம் 2 ஆயிரத்து 420 சதுர அடியிலும், முதல் தளம் 2 ஆயிரத்து 147 சதுர அடியிலும், கைவினை பொருட்கள் பணிமனை தரைதளம் மட்டும் 430 சதுர அடியிலும் என மொத்தம் 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மொத்தம் 7 வளாகங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர், கொற்கைக்கு தலா இரு வளாகங்களும், சிவகளை, நிர்வாக பிரிவு, சுகாதார பிரிவு ஆகியவை தலா ஒரு வளாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தில் தற்போது கட்டடங்களில் கதவு, ஜன்னல் பொருத்துதல், முகப்பு அலங்கார பணிகள் நடந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மொத்த வளாகமும் அழகுபடுத்தப்படுகிறது.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்திற்கு வந்து ஒவ்வொரு அரங்கத்தையும் பார்ப்பதற்கு வசதியாக பேட்டரி வாகனம் வருவதற்கான தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அருங்காட்சியக பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும் எனவும், வருகிற ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை படம் பிடித்து காட்டும் வகையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம் இன்றைய தலைமுறையினருக்கும், வருங்கால சந்ததிகளும் கண்டுகளிக்கும் வகையில் பொக்‌கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

* வரவேற்கும் வரையாடு
தமிழ்நாட்டின் விலங்கு ‘வரையாடு’. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடர்ந்த காடுகளில் வரையாடுகள் வசிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள நெல்லை மாவட்டத்தில், நெல்லை – குமரி சாலையில் பொருநை அருங்காட்சியகம் அருகே ரெட்டியார்பட்டி மலையில் பிரமாண்ட ‘வரையாடு’ சிலை நிறுவப்பட்டுள்ளது. வரையாடு சிலை, மலைச் சாலை, பொருநை அருங்காட்சியகம் என நெல்லை – குமரி சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு பொருநை அருங்காட்சியகம் சிறந்த சுற்றுலா தலமாக அமையும்.

* சுற்றுலா தலமாகிறது
நெல்லை மாவட்டம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இங்கு பாபநாசம் அகஸ்தியர் அருவி, குற்றாலம் ஆகியவை சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாக திகழ்ந்தன.

தென்காசி மாவட்டம் பிரிந்தாலும், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் நெல்லையை தொட்டு தான் செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பொருநை அருங்காட்சியகம் தமிழர் வரலாற்றை பிரதிபலிக்கும் காட்சிக் கூடமாக திகழும்.

* அழகிய மலையின் நடுவே அருங்காட்சியகம்
பொருநை அருங்காட்சியகம் நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியம் அமைந்துள்ள பகுதியில் சிறிய குன்றை குடைந்து நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடையாளமாக இரு புறமும் குன்றுகள் காட்சி தருகின்றன. இந்த குன்றின் மேல் பகுதியில் தான் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

ரெட்டியார்பட்டி மலைச் சாலை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த செங்குன்றின் அழகை ரசிப்பதுடன், சாலையின் ஓரமாக நின்று போட்டோ எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பொருநை அருங்காட்சியகமும் இந்த மலைப்பகுதியில் அமைக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

The post 3000 ஆண்டிற்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தின் பொக்கிஷம்: பொருநை அருங்காட்சியகம்; ஏப்ரல் மாதம் திறக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: