ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் 4 வது சிறிய கைத்தறி ஜவுளி பூங்கா: நெசவாளர்கள் மகிழ்ச்சி

சிறப்பு செய்தி
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அரியலூர் மாவட்டத்தில் சொல்லும் அளவுக்கு பெரிதாக திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்தனர். தற்போது, வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், அதே நேரம் மக்கள் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும் புதுப்புது திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ப்ரீ டி ரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ₹1000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைய உள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்த காலணி தொழிற்சாலை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராமப் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதில் அரசு நிலம் 100 ஏக்கரும், தனியார் வசமுள்ள 30 ஏக்கரும் சேர்த்து 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் ஜெயங்கொண்டம் பகுதி வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். முக்கியமாக, படித்த இளைஞர்கள் வேலைக்காக இனி வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சிப்காட் தொழிற்சாலை அமைவது மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் 2023-2024ம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்ட தொடரில் 10 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் 13,205 சதுர அடி பரப்பளவில் நான்காவதாக சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலாவதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கட்டிடம் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் முதற்கட்டமாக 50 விசைத்தறிகளும், தொடர்ந்து கூடுதல் கட்டிடம் அமைத்து மேலும் 50 விசைத்தறிகளும் அமைக்கப்படும். இப்பணிகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 மாதத்துக்குள் சிறிய கைத்தறி ஜவுளி பூங்கா திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் சிறிய ஜவுளி பூங்காக்கள் மூலமாக ₹1000 முதல் ₹1200 வரை நாளொன்றுக்கு ஊதியமாக நெசவாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, இங்கு நெய்யப்படும் துணிகள் விற்பனை செய்யப்படும் போது கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு நெசவாளர்களின் குடும்பத்திற்கு கிடைத்திட வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரியலூரில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது திருப்பூர், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பணியாற்றி வரும் அரியலூரை சேர்ந்த நெவசாளர்கள் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர். இனி, அவர்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்யலாம். இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் காந்தி, சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர்.

The post ஜெயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் 4 வது சிறிய கைத்தறி ஜவுளி பூங்கா: நெசவாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: