இயற்கை சூழ்நிலைகள், உயர்ந்த மலைகளின் பிரமாண்ட அழகை காண மலையேறும் போது கவனிக்க வேண்டியவை…

* வன உயிரினங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது
* பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 24ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளிடக்கிய தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையை வெளியிட்டு இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யேக இணைய வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக்கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கும் வலுசேர்க்கும் விதமாகவும் இந்த தமிழ்நாடு மலையேற்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

40 இடங்கள் தேர்ந்தெடுப்பு
இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொதுமக்களுக்காக திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் போற்றப்படும் வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 5 புலிகள் காப்பகம் , 5 தேசிய பூங்காக்கள், 18 வனவிலங்கு சரணாலயங்கள், 17 பறவை சரணாலயங்கள் மற்றும் 3 பாதுகாப்பு காப்பகங்களை கொண்டுள்ளது.

மலையேற்றம் நல்லது
குடும்ப நிர்வாகம், வேலை, குழந்தைகள் பராமரிப்பு என்றே நகர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு, மாறுதலாக அமைவதுதான் மலையேற்றம். இயற்கை சூழ்நிலைகள், உயர்ந்த மலைகளின் பிரமாண்ட அழகு, இதுவரை பார்த்திராத சவால்கள் நிறைந்த பாதைகள் என புதிய அனுபவத்தை பெற முடியும். தற்போது மலையேற்றத்துக்கு அழைத்து செல்வதற்காக பல அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்களை அணுகி தனியாகவோ, நண்பர்களுடனோ பாதுகாப்பான மலையேற்ற பயணம் செல்லலாம். மலையேற்றம் செய்வதால் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இயற்கையின் அழகில் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கும். பிறரைச் சார்ந்து செயல்படாமல் தனியாக செயல்படுவதற்கான உத்வேகம் பிறக்கும்.

மலையேற்றம் செய்வது எப்படி?
தற்போது பலரும் மலையேற்றத்தின் மீது ஆர்வம்கொண்டு, மலையேறத் தொடங்கியுள்ளனர். தமிழில் மலையேற்றம் என்று கூறினாலும் ஆங்கிலத்தில் இதை Walking, Hiking, Trekking எனப் பலவகையாகப் பிரிக்கின்றனர்.

அதாவது, Walking என்பது 1- 4 கி.மீ. தூரம் சரியான பாதை இருக்கும் பகுதியில் நடப்பது. Hiking என்றால் 4 மணி நேர தூரத்தில் இருந்து ஒரு நாளுக்குள், குறைவான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏறி, இறங்கிவிடும் வகையில் மலையேறுதல். Trekking என்றால் சற்று பெரிய பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் என சில அத்தியாவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு, இரண் முதல் சில நாள்கள் வரை, முறையான பாதை இல்லாத மலையில் ஏறுவது. மலையேற்றங்களை மேற்கொள்வதற்கு, சில அடிப்படையான விஷயங்களை அறிந்துகொள்வது அவசியம்.

அவை பின்வருமாறு
* மலையேற்றம் செல்ல தொடங்குவதற்கு முன்பு நிச்சயமாக வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
* பொதுவாக அதிகாலை வேளையில் ட்ரெக்கிங் செல்வதாலோ, மலையின் மேலே செல்வதாலோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க ரெகுலராக மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது, தியானம் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
* மலையேற்றத்திற்கு உடல் வலிமையுடன், மன வலிமையையும் முக்கியம். மனதை அமைதியாகவும், ஸ்ட்ரெஸ் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மலையேற்றம் செய்வது குறித்து பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இந்தியாவை பொறுத்தவரை தட்ப வெப்பநிலை மாற்றம் இருப்பதால் ஒவ்வோர் இடத்திலும் மலைப்பகுதி ஒவ்வொரு விதமாக இருக்கும். ட்ரெக்கிங் ஷூ என்று ஆன்லைனில் வாங்கும்போது பெரும்பாலும் பூட் போன்ற ஷூ கிடைக்கும். அதனை வாங்கி விடுவார். அதுபோல் இல்லாமல், நீங்கள் செல்லும் மலைப்பகுதிக்கு ஏற்ற ஷூவாகப் பார்த்து வாங்க வேண்டும்.
* டிரெக்கிங்கின்போது காரமான உணவுப் பொருள்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். பெரும்பாலும் பிரெட், ஜாம், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
* டார்கெட் வைத்துக்கொண்டு வேகமாக நடக்கக் கூடாது. பொறுமையாக நடந்து இலக்கினை அடைய வேண்டும். அதிகமான பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது.
* மலையேற்றத்தில் இருக்கும்போது சாய்வான இடத்தில் நின்று ஓய்வெடுக்க கூடாது; சற்று சமதள பரப்புக்கு சென்றபின் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஏற்ற, ரொம்ப தளர்வாக இல்லாத, அதிக எடையில்லாத ஆடைகளை அணியலாம்.
* தெரியாத இடங்களில் தனியாகச் செல்வதை தவிர்த்து பெரும்பாலும் வழிகாட்டியுடன் செல்வது நல்லது.
* மலைவளம் மற்றும் சுற்றுச்சூழல் காக்க, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

பலன்கள் நிறைய இருக்கு
1. இதய ஆரோக்கியம்: ‘ஹைகிங்’ எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
2. தசை: மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.
3. எடை மேலாண்மை: கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும்.
4எலும்பு அடர்த்தி: மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
5. மனநலம்: இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும்.
6. சமநிலை: மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும்.
7. சுத்தமான காற்று: புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.

பொறுப்புணர்வு ரொம்ப முக்கியம்
இயற்கையின் வளங்கள் முழுமையாக நிறைந்த மலைப்பகுதியை, மாசுபடுத்தாமல் நடந்துகொள்வது முக்கியமானது. பிளாஸ்டிக் மற்றும் தீங்கு ஏற்படுத்தும் பொருட்களை நீர்நிலைகளில் எறிவது, மண்ணில் புதைப்பது கூடாது. மலைப்பகுதிகளில் நெருப்பு மூட்டும்போது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையற்ற சத்தங்கள் எழுப்பி அங்கு வசிக்கும் மற்ற உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

இதெல்லாம் மறக்காம எடுத்துட்டு போங்க…
குளிரைத் தாங்கும் உடைகள், மழைக்கோட்டுகள், தரமான காலணி, குளிர் கண்ணாடி, தண்ணீர் பாட்டில், ஊன்றுகோல் போன்றவற்றை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். அடையாள அட்டைகள், முக்கியமான தொலைபேசி எண்கள் போன்றவற்றையும் உடன் வைத்திருக்க வேண்டும். எளிதில் கெட்டுப்போகாத எடை குறைந்த உணவுகளையும் கொண்டு செல்லலாம்.

The post இயற்கை சூழ்நிலைகள், உயர்ந்த மலைகளின் பிரமாண்ட அழகை காண மலையேறும் போது கவனிக்க வேண்டியவை… appeared first on Dinakaran.

Related Stories: