காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்கியது: பழைய ஸ்டாக்குகள் குடோனுக்கு அனுப்பி வைப்பு

காஞ்சிபுரம், நவ.16: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 220 டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபாட்டில் விற்பனை தொடங்கியது. அதிகாரிகள் உத்தரவிட்டதன்பேரில், பழைய மதுபானங்களை ஊழியர்கள் குடோனுக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த, கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு, சில்லரை விற்பனை விலையைவிட கூடுதலாக ₹10 முதல் ₹40 வரை அதிகம் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால், டிஜிட்டல் முறையில் மது விற்பனையை மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 கடைகளில் ஏற்கனவே பரிசோதனை முறையில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. அடுத்த கட்டமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 131 மதுக்கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 மதுக்கடைகளிலும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

தற்போது, மதுபான உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் கண்காணிக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதன்மூலம், தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு வெளியேறி, குடோன்களின் தங்கி, பின்னர் கடைகளுக்கு வந்து விற்பனையாகி மதுப்பிரியர்களின் கைகளில் சேர்வது வரை, அனைத்து தரவுகளையும் ‘கியூ ஆர் கோடு’ மூலம் தெரிந்துகொள்ள முடியும். அதாவது, மதுபான உற்பத்தி ஆலைகளில், மது வகைகள் பாட்டில்களில் அடைக்கப்பட்டவுடன், அதில் `கியூ ஆர் கோடு’ அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில், பாட்டிலில் மது அடைக்கப்பட்ட நாள், நேரம் டிஜிட்டல் முறையில் ஏற்றப்படும். மதுப்பிரியர்கள் இந்த மதுபாட்டில்களை வாங்கும்போது, அவர்களுக்கு ரசீது வழங்கப்படும்.

இதனால், மதுபான பிரியர்கள் கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை. பணத்தையும் ரொக்கமாகவோ, ஜி-பே அல்லது கார்டு மூலம் எளிதாக செலுத்தலாம். மதுபாட்டில்களை வாங்கிய பிறகு, அதிலுள்ள கியூ ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற டிஜிட்டல் நடைமுறையால், நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் (15ம்தேதி) நேற்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்கியது.

இதனை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் செல்போன் வடிவிலான கியூ ஆர் கோர்டினை ஸ்கேன் செய்யும் கருவியும், ரசீது வழங்குவதற்கு சிறிய வடிவிலான பிரிண்டரும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகமாக மது விற்பனையாகும் கடைகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக ஸ்கேனர் கருவி வழங்கப்படவுள்ளது. எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளில், இருப்பில் உள்ள மதுபானங்களை, டாஸ்மார்க் குடோனுக்கு கொண்டுவந்து ஒப்படைக்குமாறு பணியாளர்களுக்கு டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து, மதுபானங்களை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு மதுபான கடைகள் திறந்தவுடன் டிஜிட்டல் மூலம் மது விற்பனை தொடங்கியது. டிஜிட்டல் முறையில் மதுபான பாட்டில்களை ஸ்கேன் செய்து பணத்தை பெற்றுக்கொண்டு மதுபான பிரியர்களுக்கு வழங்குவதற்கு சற்று கால தாமதம் ஏற்படுவதால், மதுபான கடைகளில் நீண்ட வரிசையில் மதுபான பிரியர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்கியது: பழைய ஸ்டாக்குகள் குடோனுக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: