வெங்காடு ஊராட்சியில் பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். வெங்காடு சிப்காட் பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு அசாம், ஒரிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வெங்காடு பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் வெங்காடு ஊராட்சியில் பெண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. வெங்காடு பகுதியில் இயங்கி வரும் யூனிட்டெக், பிளஸ்கோ தொழிற்சாலை, கல்பவிருச்சம் டிரஸ்ட் மற்றும் ஊராட்சி இணைந்து நடத்திய இந்த பரிசோதனை முகாமிற்கு வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை வகுத்தார்.

தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஜெகதீசன், டாக்டர்கள் பானுப்பிரியா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவர் உலகநாதன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜு, துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: