திருப்போரூர், டிச.16: திருப்போரூர் ஒன்றியத்தில் வாங்கப்படும் புதிய வாகனங்களின் பதிவு திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், மாம்பாக்கம், நாவலூர் ஆகிய இடங்களில் புதியதாக வாங்கப்படும் வாகனங்கள், தற்போது வரை செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமான திருப்போரூர் பகுதியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இந்த, கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் என்பவர், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனுப்பிய மனுவின் அடிப்படையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், திருப்போரூர் பகுதியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டுமென வரப்பட்ட கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டது. செங்கல்பட்டு போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவுக்கு வந்த வாகனங்களில் பெரும்பாலானவை திருக்கழுக்குன்றம் ஒன்றிய கிராமங்களில் இருந்தே வந்துள்ளன. திருப்போரூர் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் குறைவான அளவில் இருந்ததால், புதிய அலுவலகம் திருக்கழுக்குன்றத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் திருப்போரூர் பகுதி வாகனங்கள், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தால் பதிவு செய்யப்பட்டு பதிவு எண்ணும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்போரூர், கேளம்பாக்கம், கோவளம், கானத்தூர், நெல்லிக்குப்பம், நாவலூர், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதியதாக வாங்கப்படும் வாகனங்கள் அனைத்தும் இனி திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் பதிவு செய்யப்பட்டு, புதிய பதிவு எண் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. மேற்படி, பகுதிகளின் அஞ்சல் குறியீடுகள் திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதால், பொதுமக்கள் இனி திருக்கழுக்குன்றம் அலுவலகத்தை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
