ஆனால் உரிய நேரத்தில் பணம் டெபாசிட் செய்யப்படாததால், நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடி ரூபாயை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணி சொத்தாட்சியருக்கு பணம் செலுத்தப்பட்டு விட்டதால் கங்குவா படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டுமென்று கோரி மனுதாக்கல் செய்தார்.
இதை சொத்தாட்சியர் தரப்பு ஏற்க மறுத்தார்.இதைத் தொடர்ந்து, மேலும் 3 கோடியே 75 லட்சம் ரூபாயை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் ஸ்டுடியோ கிரீன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், டிசம்பர் 11ம் தேதிக்குள் 3 கோடியே 75 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கங்குவா படத்தை வெளியிட அனுமதி அளிக்கிறோம். மேலும் ₹3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடர்பாக நாளை மாலைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இந்தி உரிமைக்காக பெற்ற 1 கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயாக திருப்பித்தராமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 1 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தலைமைப் பதிவாளர் பெயரில் இரு வரைவோலைகள் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து படத்தை வெளியிட ஆட்சேபம் இல்லை என்று பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, கங்குவா படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இரு வரைவோலைகளையும் வங்கியில் செலுத்தி பணமாக்கி அதனை நிரந்தர வைப்பீடாக வைக்க வேண்டும் என்று தலைமைப் பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post இரு வழக்குகளில் ₹8 கோடி செலுத்தியதால் கங்குவா திரைப்படத்தை வெளியிட அனுமதி: நிபந்தனையுடன் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.