பவுர்ணமி, வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் 366 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
நவ.15ம் தேதி (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி, 16ம் தேதி (சனிக்கிழமை) வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு நவ.15ம் தேதி 460 பேருந்துகளும், 16ம் தேதி 245 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நவ.15ம் தேதி 265 பேருந்துகளும், 16ம் தேதி 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15,16 ஆகிய தேதிகளில் 11 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 நாட்கள் 5 பேருந்துகளும், ஆக 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பவுர்ணமி, வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: