ஈரோடு, நவ. 10: காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், குப்பைகள் கொட்டப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்கள் நேரடியாக தினந்தோறும் பெற்று, மக்கும் குப்பைகளை நுண்ணுயிர் உரக்கிடங்குகளுக்கும், மக்காத குப்பையை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கோணவாய்க்கால் மற்றும் காரைவாய்க்காலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் குடியிருப்பு மற்றும் வணிக கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளது. இதனால், வாய்க்கால் தண்ணீர் மாசு ஏற்படுவதோடு மட்டும் அல்லாமல் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி மூலம் எச்சரிக்கை பதாகைகள் வைத்து, குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.