வேலூர், நவ.10: வேலூரில் தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது ஆட்டோவில் வந்த பெண் பயணி தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பல்வேறு சிகிச்சைக்காக வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் தினமும் வருகின்றனர். இவர்கள் ரயில்மூலம் காட்பாடிக்கு வந்து அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் தனியார் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதன்படி நேற்று காட்பாடிக்கு வந்த வடமாநில பெண், ரயில் நிலையத்தில் இருந்து தனியார் மருத்துவமனை வரை ஜெயவேல் என்பவரின் ஆட்டோவில் பயணித்தார். பயணியை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் ஜெயவேல், இருக்கையில் பார்த்தபோது விலை உயர்ந்த செல்போன் இருப்பதை கண்டார். ஆட்டோவில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் தவறவிட்டது தெரியவந்தது. சுமார் ₹40 ஆயிரம் மதிப்பிலான செல்போனை ஆட்டோ டிரைவர் ஜெயவேல் வேலூர் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரின் இந்த செயலை பாராட்டிய போக்குவரத்து போலீசார் அவருக்கு ஊக்கத்தொகை அளித்தனர். பின்னர் அந்த செல்போனை வடமாநில பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
The post பெண் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் போலீசார் ஊக்கத்தொகை வழங்கினர் வேலூரில் சிகிச்சைக்கு வந்த appeared first on Dinakaran.