சார் பதிவாளர் மீது விஜிலென்ஸ் வழக்கு ; அரசியல் முக்கிய பிரமுகர்கள் சிக்கிவார்களா? விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

வேலூர், டிச. 30: காட்பாடியில் தனிநபர்களுக்கு முறைகேடாக 106 ஏக்கர் அரசு நிலம் மோசடியாக பதிவு செய்த சார் பதிவாளர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் வருவாய் கிடைக்கும் துறையில் ஒன்றாக பத்திரப்பதிவு துறை உள்ளது. இந்த துறையில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக என தணிக்கை துறையினர் ஆய்வு செய்து, வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, பல சார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து, அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வின் போது, போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்து கொடுத்தாக அப்போதை சார் பதிவாளர்(பொறுப்பு) சிவக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த அறிக்கையை பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் சிவக்குமார் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அரசுக்கு சொந்தமான 105.82 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்து, இதற்கு லஞ்சமாக பல லட்சம் கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. விஜிலென்ஸ் போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறுகையில், ‘காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தாண்டு ஜூன் 1ம் தேதி வரை சிவக்குமார் சார் பதிவாளராக பொறுப்பில் இருந்தார். அப்போது, போலியான ஆவணங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு செய்து கொடுத்துள்ளார். பின்னர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை 8.85 ஏக்கர், 0.24 ஏக்கர், 0.76 ஏக்கர், 6.01 ஏக்கர், 0.36 ஏக்கர், 5.51 ஏக்கர், 4.55 ஏக்கர், 2 ஏக்கர், 24.37 ஏக்கர், 32.49 ஏக்கர், 0.70 ஏக்கர், 2.90 ஏக்கர், 3.76 ஏக்கர், 12.41 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 105.82 ஏக்கர் நிலங்களை 14 பத்திரங்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை தொடங்கி உள்ளோம். இந்த முறைகேட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த சிவக்குமார், 105.82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் 14 பேருக்கு தான செட்டில்மென்ட் பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்காக அந்த நபரிடம் சிவகுமார், குறிப்பிட்ட தொகை வாங்கியுள்ளார். 105.82 ஏக்கர் அரசு நிலத்தை பதிவு செய்து தொடர்பாக, பத்திரப்பதிவு ஆவணங்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்டிருந்த ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கலெக்டர் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு புறம்போக்கு நிலத்தை மீண்டும் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவக்குமார் பதிவு செய்து கொடுத்த நிலத்தின் மதிப்பு சுமார் 30 கோடியாகும்’ என்றனர்.

The post சார் பதிவாளர் மீது விஜிலென்ஸ் வழக்கு ; அரசியல் முக்கிய பிரமுகர்கள் சிக்கிவார்களா? விசாரணையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: