கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பத்தில் தொடர் மழையால் ஏரி நிரம்பி வழிந்தோடும் உபரிநீர்: மலர்தூவி கோடி விட்டு வழிபட்ட கிராம மக்கள்

கீழ்பென்னாத்தூர், டிச. 30: கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் நிரம்பி வெளியேறும் உபரிநீரில் கிராம மக்கள் நேற்று மலர்கள் தூவி கோடி விட்டு வழிபட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரி மற்றும் குளங்கள் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. அதனை தொடர்ந்து, திருவண்ணணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மழை வெள்ளம் அதிகரித்த நிலையில், ஓடையின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து நீர்நிலைகள் நிரம்பியது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரி பரப்பளவில் பெரிய ஏரியாகும். இந்த பெரிய ஏரியானது கடந்த 2021ம் ஆண்டில் தொடர் மழையால் கோடி போனது. அதன் பிறகு கடந்த மாதத்தில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து மழையால் வௌ்ளம் பெருக்கெடுத்து, ஓடையின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து இம்மாதத்தில் நிரம்பி நேற்று முன்தினம் இரவு உபரி நீர் வெளியேறியது.

இந்நிலையில் கருங்காலிகுப்பம் மற்றும் கீழ்பென்னாத்தூர் பொதுமக்கள் ஒன்றிணைந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வாண வேடிக்கையுடன் சென்று கருங்காலிகுப்பம் பெரிய ஏரியில் தண்ணீர் நிரம்பி வெளியேறும் உபரிநீரை பூஜை செய்து ஏரியிலிருந்து வெளியேறும் இடத்தில் புது புடவை, 25வகையான தட்டுவரிசை உட்பட அரை பவுன் தாலியுடன் மலர்தூவி கோடி விட்டு வழிபட்டனர்.

இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் மூலம் பல கிராமங்களிலுள்ள ஏரிகளுக்கு நீர் நிரம்பும். இதனால், கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், நெடுங்காம்பூண்டி மற்றும் காசி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசம் அடைந்து விவசாயிகள் பயன்பெறவாய்ப்புகள் உள்ளன என கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில் கருங்காலிகுப்பம் மற்றும் கீழ்பென்னாத்தூர் பகுதி ஊர்பெரியவர்கள், கோயில் பூசாரிகள் உட்பட கிராம மக்கள் சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

The post கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பத்தில் தொடர் மழையால் ஏரி நிரம்பி வழிந்தோடும் உபரிநீர்: மலர்தூவி கோடி விட்டு வழிபட்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: