தேவாரம், நவ.6: தேவாரத்தில் ஊருக்குள் வெள்ளம் புகுவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது என தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தேவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பிரம்பு வெட்டி ஓடையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தண்ணீர் மேலும் அதிகரித்ததால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் சுமார் 100 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று தேவாரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார். அப்போது, பாதிப்படைந்த வீடுகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் புதிதாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேவாரம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் அதை தடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனையின் பேரில் இங்குள்ள பிரம்பு வெட்டி ஓடை அடிவாரப் பகுதியில் புதிதாக தடுப்பணை கட்டி, ஓடை செல்கின்ற பகுதி முழுவதும் தடுப்பு சுவர் மற்றும் மூன்று பெரிய பாலங்கள், ஓடை சிலிண்டர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட பணியாக பொதுப்பணித்துறை, மஞ்சளாறு வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். மேலும் இது குறித்து அடுத்த வாரம் கலெக்டர், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்ற ஆலோசனைக் கூட்டமும் நடத்த உள்ளோம் இவ்வாறு கூறினார். அப்போது தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post தேவாரத்தில் புதிய தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்: தேனி எம்பி தகவல் appeared first on Dinakaran.