திருச்சி, நவ.5: நேற்று வரை ஓயாத தீபாவளி கூட்டத்தால் மத்திய பஸ் நிலைய சுற்றுப்புற சாலைகளில் வரிசை கட்டி நின்ற வானங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாரினர். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் அமோகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கு காரணம், தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்.31) அன்று வந்ததால் தமிழ்நாடு அரசு, வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்ததே. வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினமாக அமைந்ததால், இந்த தீபாவளி அனைத்து தரப்பினருக்கும் அமர்க்களமாக அமைந்தது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி உற்சாகம் மக்களிடையே ஒட்டிக்கொண்டது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்த்து வந்தவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயின்று வந்த மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தம் சொந்த ஊர்களுக்கு சென்று சாவகாசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிந்தது.
ஆண்டு முழுவதும் வெளியூர்களில் அலுப்புடன் வேலை செய்து சளிப்படைந்திருந்த பலருக்கும் இந்த தீபாவளி புதிய உற்சாகத்தை தந்தது என்றால் மிகையாகாது. வௌியூரில் தங்கி வேலை பார்த்து வரும் மகன், மகள், பேரக்குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் என அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்த, பெற்றோர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் திகட்ட, திகட்ட தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அரசு சார்பில் கடந்த அக்.28ம் தேதி முதலே அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு, சிரமமின்றி சென்றுவர வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் நிம்மதியாக சொந்த ஊர் சென்று பண்டிகையை சொந்தம், சுற்றங்களுடன் கொண்டாடினர்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், ஞாயிறு காலை முதலே மக்கள் தங்கள் பணியிடங்களை நோக்கி பயணிக்கத் துவங்கினர். திருச்சி மத்திய மாவட்டம் என்பதால் பஸ்கள், கார்கள் திருச்சியை கடந்து சென்றன. இந்த வாகனங்களில் பெரும்பாலானவை நகரப்பகுதிகளுக்குள் வரவில்லை என்றாலும், மாவட்ட எல்லைகளில் திருச்சியை சந்திக்கும் சாலைகளில் ஒரே நேரத்தில் குவிந்தன. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில், கார், பஸ், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது. ஞாயிறு முதல் அதிகரித்த கூட்டம் நேற்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. தீபாவளிக்காக கூடுதலாக ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தவர்கள் நேற்று பணியிடங்களுக்கு திரும்பினர். இதற்காக கூடுதலாக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் அதிகரித்ததால் போக்குவரத்தை கனிக்க முடியவில்லை.
ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை மாநகர, மாவட்ட போலீசார் ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை முறைப்படுத்தினர். இருந்தபோதும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திருச்சி மத்திய பஸ் நிலையம் உள்ளே செல்லும் அனைத்து சாலைகளிலும் பஸ், கார்கள், ஆம்னி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகட்டி நின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தை கடக்க முயன்ற அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே முடங்கின. பல மணி நேரம் தேங்கி நின்ற வாகனங்களை மிகுந்த சிரமத்துக்கிடையில் போலீசார் சீரமைக்க முயன்றனர். நேற்றிரவு இரவு 8 மணிக்கு மேல் துவங்கிய இந்த போராட்ட பயணம் முடிவுக்கு வர இரவு 11.30 மணிக்கு மேல் ஆனது. மொத்தத்தில் நேற்றிரவு வெளியூர் பயணிகளுடன், உள்ளூர் வாகன ஓட்டிகளிலும் பஸ் நிலையப் பகுதியில் சிக்கி தவித்தனர்.
The post திருச்சியில் ஓயாத தீபாவளி கூட்டம்: நெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு appeared first on Dinakaran.