நாகர்கோவில், நவ.5: கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீசார் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்ட கலெக்டரிடம் அதன் நிர்வாகிகள் தலைவர் பென்சிகர் தலைமையில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மருத்துவ கல்லூரிகளில் கைதிகள் பாதுகாப்பு அறை உள்ளன.
ஆனால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் இல்லை. காவலில் உள்ள கைதிகள் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது காவல்துறையினர் பாதுகாப்பு செய்து வருகின்றனர். ஆனால் கைதிகள் பாதுகாப்பின் போது கைதிகளை இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் செல்லும் போது காவலர்களின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பி ஓடி தலைமறைவாகி விடுகின்றனர்.
இது அவ்வப்போது நடந்து வருவதால் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் தண்டனை பெறுவதோடு காவல்துறை க்கு பொதுமக்கள் மத்தியில் அவமரியாதை ஏற்படுகிறது. எனவே சிகிச்சையில் உள்ள கைதிகளை பாதுகாக்கும் பொருட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கைதிகள் பாதுகாப்பு அறை அமைத்து காவலர்களின் மனக்குமுறலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
The post அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகள் பாதுகாப்பு அறை: ஓய்வு பெற்ற போலீசார் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.