உத்திரமேரூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் வட்டத்தில், ‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்’ இன்று நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் (புதன் கிழமையில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி இன்று உத்திரமேரூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரைக்கும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம்.

அதன்படி, மாவட்ட கலெக்டரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் முகாம் நடவடிக்கைகள் விவரம்: முகாம் நடைபெறவுள்ள வட்டம்: உத்திரமேரூர் வட்டத்தில் (23.10.2024) இன்று காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாள் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றை பார்வையிடுதல் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிருவாக அலுவலர் அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களை ஆய்வு மேற்கொள்ளுதல், திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்படும்.

மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை கள ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துகளின் மீது ஆய்வுக் கூட்டம் நடைபெறும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும். மாலை 6 மணி முதல் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்களை பார்வையிடுதல், பேருந்து நிலையம், பொது கழிப்பிடங்கள், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள் பார்வையிட்டு, மேற்படி வட்டத்தில் சுற்றுப்பயணம் முடிந்து இரவு தங்கப்படும்.

இரண்டாம் நாளான நாளை (24ம்தேதி) காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைககள், குடிநீர் வசதி, பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முதலியவற்றை பார்வையிடுதல், காலை 9 மணி சுற்றுப்பயணம் முடிவுற்று தலைமையிடத்திற்கு திரும்புதல். மேற்படி முகாம் நடைபெறும் நாளன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் தொடர்பாக மனுக்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பட்டா மாறுதல் தொடர்பாக தங்களது மனுக்களை இம்முகாமில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உத்திரமேரூர் வட்டத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: