செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புழுதி பறக்கும் 4 வழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

செய்யூர்: செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4 வழி சாலை புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வரை ரூ.603 கோடி மதிப்பீட்டில் 109 கிலோ மீட்டரில் 4 வழி இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சோத்துப்பாக்கம் வரை செல்லும் சாலை பணி நிறைவடைந்துள்ளது. இதில், ஏராளமான வாகனங்கள் அந்த சாலை வழியாக சென்று வருகின்றன. மேலும், செய்யூர்- சோத்துப்பாக்கம் இடையே இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு செல்ல ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்நிலையில், மழைக்காலங்களில் டிப்பர் லாரிகள் குவாரிகளுக்குள் சென்று வரும்போது புதிதாக போடப்பட்ட இந்த சாலை முழுவதும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. மேலும், இச்சாலையில் படிந்துள்ள சேறும், சகதியும் காய்ந்தபின் அவை புழுதியாக கிளம்புகிறது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செய்யூர்-சோத்துப்பாக்கம் இடையே புழுதி பறக்கும் 4 வழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: