மனித உயிர்களை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் பலி வாங்கும் இஸ்ரேலின் போர்: நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை

ஜெருசலேம்: இஸ்ரேலின் போரால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? ராணுவச் செலவுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை தொடங்கும் முன்பாக இஸ்ரேல் அரசு தனது ராணுவத்திற்காக மாதம் ரூ.15,000 கோடி செலவழித்த நிலையில், தற்போது மாதாந்திர ராணுவ செலவு ரூ.39,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இஸ்ரேல் தனது ராணுவத்திற்காக மொத்தம் ரூ.2.28 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. ஹமாஸ் போருக்கு பிறகு 3 மாதங்களில், இஸ்ரேல் பொருளாதார உற்பத்தி 5.6% ஆக சுருங்கியது.

இது பணக்கார நாடுகளின் குழுவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள 38 நாடுகளில் மிக மோசமான செயல்திறன். இந்த ஆண்டின் முதல் பகுதியில் இஸ்ரேலின் பொருளாதாரம் 4% வளர்ச்சியுடன் ஓரளவு மீண்டெழுந்தாலும், 2வது காலாண்டில் 0.2% மட்டுமே வளர்ந்தது. இதுவே காசாவை எடுத்துக் கொண்டால், அதன் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து விட்டது. அங்கு 90 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதே போல, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன மக்கள் வசிக்கும் மேற்குக் கரையின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு, 2023 அக்டோபர் 7க்குப் பிறகு இஸ்ரேலில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. முதல் காலாண்டில் மேற்கு கரை பொருளாதாரம் மைனஸ் 25% வீழ்ச்சி அடைந்ததாக உலக வங்கி கூறுகிறது. இதுதவிர, இப்போர் இஸ்ரேலில் இன்னும் பல பொருளாதார சுமைகளை சுமத்தியுள்ளது. குறிப்பாக ராணுவத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக் கவலைகள் தொழில்துறையில் முதலீட்டைத் தடுக்கின்றன. மேலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா துறை முழுவதும் முடங்கியிருக்கிறது. இதற்கிடையில், காசாவின் எல்லைக்கு அருகில் தெற்கிலும், ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு ஆளான வடக்கிலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களுக்கு அரசே வீடுகளை கட்டி அனைத்து செலவுகளையும் கவனித்து வருகிறது.

இது ஓராண்டாக நீடிக்கும் போரில் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகி உள்ளது. அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 80 சதவீதமாக உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. தற்போதைய சூழலில், இஸ்ரேலின் பொருளாதாரத்தில் மிகவும் பக்கபலமான தொழில்நுட்ப துறை மட்டுமே காப்பாற்றி வருகிறது. ஆனாலும் விரைவில் இஸ்ரேலின் பணவீக்கம் 6 சதவீதத்தை எட்டும் எனவும், அப்போது வரியை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விடும் என்றும், மக்களுக்கான பல சலுகைகளை அரசு நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறி உள்ளது.

* அமெரிக்காவின் நிதி இஸ்ரேலின் பலம்
அதிபர் பாரக் ஒபாமா நிர்வாகத்தின் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, காசா போருக்கு முன்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் ரூ.32,000 கோடி நிதி உதவி வழங்கி வருகிறது. இது போருக்கு முந்தைய இஸ்ரேலின் ராணுவ செலவில் 14 சதவீதமாகும். ஆனால் போருக்குப் பிறகு தற்போது அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதி வழங்குகிறது. அமெரிக்காவின் இந்த உதவியால் தான் இஸ்ரேலால் தைரியமாக போரிட முடிகிறது.

The post மனித உயிர்களை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் பலி வாங்கும் இஸ்ரேலின் போர்: நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: