தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல்; ஐ.நா அமைதி படை கண்காணிப்பு கோபுரம் தரைமட்டம்: இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரம்

காசா: தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள ஐ.நா அமைதி படை கண்காணிப்பு கோபுரம் தரைமட்டமாக்கியது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் இதுவரை காசாவில் மட்டும் 42,603 ​​பேர் பலியாகினர்; 99,795 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் காசாவின் பெரும்பகுதியை அழித்த இஸ்ரேல், தற்போது அண்டை நாடான லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் இருப்பிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தெற்கு லெபனான் பகுதியில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களால் கடந்த 3 வாரத்தில் 2,500க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

அதேநேரம் தெற்கு லெபனான் பகுதியில் ஐ.நா-வின் அமைதிப் படை வீரர்கள் முகாமிட்டிருந்த நிலையில், அவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அதனால் சர்வதேச நாடுகளை சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய படைகள், அங்குள்ள அமைதி படையின் கண்காணிப்பு கோபுரத்தை புல்டோசரை கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது. நேற்று மட்டும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் 12 ஏவுகணைகளை இஸ்ரேல் வீசியுள்ளது. அதேபோல் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

பலரை காணவில்லை. குறிப்பாக அங்கு வசிக்கும் ஜபாலியா, பெய்ட் ஹனூன், பெய்ட் லஹியா மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசாவில் வடக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களும் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கையானது காசாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ெபரும் அழிவை ஏற்படுத்தக்கூடும்’ என்று கவலை தெரிவித்து உள்ளது.

The post தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல்; ஐ.நா அமைதி படை கண்காணிப்பு கோபுரம் தரைமட்டம்: இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: