உக்ரைன் போரில் உதவ ரஷ்யா வந்துள்ள வடகொரியா படையை வெளியேற்றுங்கள்: தென் கொரியா வலியுறுத்தல்

சியோல்: உக்ரைன் போரில் உதவுவதற்காக இம்மாத தொடக்கத்தில் வடகொரியா 1,500 சிறப்பு அதிரடிப் படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியதாக தென் கொரிய உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், 10,000 வடகொரியா வீரர்கள் ரஷ்ய படையுடன் இணைந்து போரிட ஆயத்தமாகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதர் ஜார்ஜி ஜினோவியேவ் நேரில் வந்து விளக்கம் தர தென் கொரியா வெளியுறவு துறை சம்மன் விடுத்தது.

அதன்படி, தென் கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் ஹாங் கியூனை சந்தித்த ரஷ்ய தூதரிடம், ரஷ்யாவில் உள்ள வடகொரியா படைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது எந்த விதத்திலும் தென் கொரியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது அல்ல என்றும் ரஷ்ய தூதர் கூறியதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வடகொரியா , ரஷ்யா பரஸ்பர ராணுவ உதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், உக்ரைன் போரில் உதவுவதற்கு பிரதிபலனாக வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தென் கொரியாவுக்கு எதிரான அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என வடகொரியா மிரட்டி வரும் நிலையில் ரஷ்யாவின் அதிநவீன அணு ஆயுதங்கள் கிடைத்தால் நிலைமை விபரீதமாகும் என தென் கொரியா கவலை தெரிவிக்கிறது. அதே சமயம், வடகொரியாவுக்கு உயர் தொழில்நுட்ப அணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்பங்களை வழங்கினால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் தென் கொரியா, ரஷ்யாவை எச்சரித்துள்ளது.

The post உக்ரைன் போரில் உதவ ரஷ்யா வந்துள்ள வடகொரியா படையை வெளியேற்றுங்கள்: தென் கொரியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: