அதிகாலை ஆன்லைன் யோகா வகுப்புக்கு கட்டாயப்படுத்தும் கல்வித்துறை அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு


நெல்லை: தினமும் அதிகாலை 4.30 மணிக்கே ஆன்லைன் யோகா வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வட்டார கல்வி அலுவலர் ஒருவரால் ஆசிரியர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லையை சேர்ந்த ஒரு வட்டார கல்வி அலுவலர், யோகாவின் பெருமைகளை எடுத்துரைப்பதோடு, அதற்கான ஆன்லைன் வகுப்புகளில் அதிகாலையிலே பங்கேற்க கட்டாயப்படுத்தி வருவது ஆசிரியர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கான குழுவில் பேசியதாவது: யோகா ஆன்லைன் வகுப்பில் சிலர் காலையிலே பங்கேற்கிறீர்கள். விடியற் காலையில் எழுந்தால் அதுவே நல்ல பயிற்சி. ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும், இப்பயிற்சி மூலம் பயன்பெற முடியும்.

9 மாதமாக இப்பயிற்சியில் நான் தொடர்ந்து பங்கேற்று உள்ளேன். இப்பயிற்சிக்கு பின்னரே நான் பதவி உயர்வு பெற்றேன். எனக்கு லாக் ஆன பணமெல்லாம் இப்பயிற்சிக்கு பின்னரே வந்தது. தொழில் முன்னேற்றமும் கிடைத்தது. இப்பயிற்சிக்கு பின்னர் என் வாழ்வில் பல அதிசயங்கள் நிகழ்ந்தன. நான் அரைமணி நேரம் லேட்டாக சென்றாலும், ட்ரெயின் போகாமல் நின்றது. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றாலும், டிடிஆர் கண்டு கொள்ளாமல் இருந்த சம்பவங்கள் உண்டு. முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்துவிட்டு, முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ரயிலை தவறவிட்டாலும், அதிலும் சில நல்லது நடக்கும். அதுபோல் ஐகோர்ட்டில் நான் சென்ற விஷயங்கள் அனைத்திலும் வெற்றி கிடைத்தது. என் மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரியையே நான் ஓபன் மைக்கில் நிர்வாக திறமை இல்லாதவர் என பேசினேன்.

அவரால் என்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நமக்கு நன்மை செய்கிற யோகா பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் சொல்கிற பயிற்சியை தொடர்ந்து செய்வோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. இப்பயிற்சியில் 2 ஆண்டு பங்கேற்றால், மாதம் ரூ.1 லட்சம் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இப்பயிற்சியில் உள்ள அத்தனை விஷயங்களும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதாகும். அடுத்த நாளில் இருந்தே 4.45 மணிக்கு இந்த பயிற்சியில் பங்கேற்று கொள்ளுங்கள். அந்த குழுவில் நாளை பங்கேற்காதவர்கள், சரியான காரணம் சொல்லவில்லையென்றால், அவங்களோட விதி பாவத்தை கொண்டு வரும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த பேச்சு பரவி வருவதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பயிற்சிக்கு பின்னர் என் வாழ்வில் பல அதிசயங்கள் நிகழ்ந்தன. நான் அரைமணி நேரம் லேட்டாக சென்றாலும், ட்ரெயின் போகாமல் நின்றது. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றாலும், டிடிஆர் கண்டு கொள்ளாமல் இருந்த சம்பவங்கள் உண்டு.

The post அதிகாலை ஆன்லைன் யோகா வகுப்புக்கு கட்டாயப்படுத்தும் கல்வித்துறை அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: