உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்த உடும்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

 

உசிலம்பட்டி, அக். 17: உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி. இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு புகுந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த உடும்பு பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினி, இதுகுறித்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைடுத்து அங்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான வீரர்கள், நீண்ட நேரம் போராடி வீட்டிற்குள் இருந்த உடும்புவை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,‘‘ இந்த ஆண் உடும்பு சுமார் 3 வயது மதிக்கத்தக்கது. இதன் எடை 5 கிலோ. 5 அடிக்கும் மேல் நீளமுள்ள இந்த உடும்பு அறியவகையை சேர்ந்தது. இங்குள்ள கண்மாய் பகுதியிலிருந்து உணவு தேடி வந்திருக்கலாம்’’ என்றனர். பின்னர் அந்த உடும்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்த உடும்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: