தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

 

ஈரோடு, அக். 17: தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஈரோடு கலெக்டர் உத்தரவின் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்து பேசியதாவது:

தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவுச்சான்று கட்டாயம் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவை பலகார பாக்கெட்டுகள் மீது குறிப்பிட்ட பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.
உணவு பொருள்களை கையாளுபவர்கள் கையுறை, முகக்கவசம், தலைக்கவசம், ஆகியவற்றை அணிந்து சுகாதாரமாக பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்கூடாது. உணவு பொருள்களை கையாள்பவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு உபயோகம் செய்தல் கூடாது. மாறாக, உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட பயோ டீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, உணவுப்பொருள்கள் மீதான புகார்களுக்கு 94440 42322 எனும் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவ ராஜ், செல்வன், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: