அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்; 100 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது: உறவினர்கள் வீடுகளில் மீனவர்கள் தஞ்சம்


குளச்சல்: அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து உறவினர்களின் வீடுகளில் மீனவர்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். அன்படி கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆனால் ராட்சத அலைகள் எழும்பவில்லை.  இந்தநிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி இந்த மாதம் அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை தென் தமிழக கடற்கரை, குமரி கடற்கரையில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வரை காற்றின் வேகம் இருக்குகூடும் எனவும் மீனவர்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை தகவல் அளித்து உள்ளது.

இந்த எச்சரிக்கை தகவல் குமரி மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் குமரி கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் கடலில் பெரும் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுந்தது. இதனால் அழிக்கால் கிழக்கு தெரு, மேற்கு தெரு, நடுத்தெரு ஆகிய பகுதியில் சுமார் 100 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்ரையின் முன் வரிசை வீடுகளுக்குள் கடல் நீருடன் மணலும் சேர்ந்து புகுந்தது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாயின. வீட்டிற்குள் கடல் நீர் புகுவதை தடுக்க மீனவர்கள் மணல் மூடைகளை அடுக்கி வாசலில் வைத்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த நீரும், வீடுகளை சூழ்ந்த நீரும் வடியாததால் மீனவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அழிக்காலில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் பிள்ளைத்தோப்பு கடற்கரை வழியாக முட்டம் துறைமுக பகுதிவரை சென்று பாய்ந்தது. தகவலறிந்ததும் உடனே நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி, ஏ.எஸ்.பி. லலித்குமார், மாவட்ட மீன்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள், குளச்சல் மரைன் போலீசார், வெள்ளிச்சந்தை சட்டம் – ஒழுங்கு உள்பட வருவாய் துறையினர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பாதுகாப்புப்பணிகளை மேற்கொண்டனர். கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜெ.சி.பி. ஏந்திரம் மூலம் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி விடும் பணி நடந்து வருகிறது.

107 பேர் முகாம்களில் தங்க வைப்பு
அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்ட பகுதிகளை நாகர்கோவில் ஆர்டிஒ காளீஸ்வரி சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்பட உயர் அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே கடல் நீர் புகுந்த வீடுகளில் வசித்து வரும் மக்களை மீட்டு அதிகாரிகள் முகாம்களில் தங்க வைத்து உள்ளனர். அந்த வகையில் 58 பெண்கள், 37 ஆண்கள், 12 குழந்தைகள் என்று மொத்தம் 107 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. பணி முடிவுற்றதும் மக்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்; 100 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது: உறவினர்கள் வீடுகளில் மீனவர்கள் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: