ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை: ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க ஆர்பிஎப், ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய நாட்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். அதனை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருடும் கும்பல் நடமாட்டம் இருக்கும் என்பதால் ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ரயில்வே ஸ்டேஷன்களில் பண்டிகை கால திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் இணைந்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார், கோவை-சென்னை மார்க்கம், கோவை-கரூர் மார்க்கம், சேலம்-கரூர் மார்க்கத்தில் இயங்கும் முக்கிய ரயில்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் மப்டியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘‘சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், பண்டிகை காலங்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி திருச்சி ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சீசன் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். அதனை தடுக்க தற்போதே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேக நபர்கள், பழைய கொள்ளையர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். அதேபோல், சென்னையில் இருந்து கோவை செல்லும் முக்கிய ரயில்களில் இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை: ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: