பாலிவுட்டை கதி கலங்க வைத்த பாபா சித்திக் கொலை

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அரசியலில் மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் தான் மொத்த பாலிவுட்டும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருந்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் முன்னணி நிர்வாகியாக இருந்தார்.

எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2 தினங்களுக்கு முன் அவர், மும்பையில் உள்ள தனது மகனும் எம்எல்ஏவுமான சீஸன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று மர்மநபர்கள் பாபா சித்திக்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பாபா சித்திக் உயிரிழந்தார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர் இந்நிலையில் பாபா சித்திக் கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ், தன் கூட்டாளிகளுடன் சிறையில் வைத்தே பாபா சித்திக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். பாபா சித்திக் அரசியல் கட்சி தலைவர் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் நல்ல செல்வாக்கு படைத்தவர். முக்கியமாக பிரபல நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.

அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான், பாபா சித்திக்கை கொன்றதாக லாரன்ஸ் கேங் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபா சித்திக் தன் பதின் பருவத்திலேயே காங்கிரஸில் இணைந்துவிட்டார்.,கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே பந்தரா பகுதியின் முக்கிய முகமாக மாறினார். 1999 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

2004-08 காலகட்டத்தில் மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சராக இருந்தார். அரசியலுக்கு இணையாக சினிமாத் துறையிலும் ஆளுமையான நபராக வலம் வந்தார். ஷாருக்கான், சல்மான்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ரம்ஜான் காலத்தில் பாபா சித்திக் கொடுக்கும் பிரமாண்ட இப்தார் விருந்து மும்பையில் மிகவும் பிரபலம். விவிஐபிகள் மட்டுமே அதில் கலந்து கொள்வார்கள். அந்த விருந்தில் கலந்து கொள்வதை விஐபிகளே பெருமையாக நினைப்பார்கள்.

பாலிவுட்டில் இருந்த பல பிரச்னைகளுக்கும் அந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி தீர்வு கொடுத்துள்ளது. முன்பு ஷாருக்கான் – சல்மான்கான் இடையே சில மனஸ்தபங்களால் இருவரும் பேசாமல் இருந்தனர். 2013 ஆம் ஆண்டு பாபா சித்திக் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இதற்கு தீர்வு காணப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பிரபல திரைக்கதை எழுத்தாளரும், சல்மான் கானின் அப்பாவுமான சலிம்கான் அருகில், ஷாருக்கானுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு பிறகு தான் எதிர் துருவங்களாக இருந்த ஷாருக் – சல்மான் மீண்டும் நட்புறவுடன் பழகினார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, கேத்ரினா கைஃப், ஊர்மிளா மடோன்கர், சோனு சூட், சுசாந்த் சீங் ராஜ்புட், மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் பாபா சித்திக்கின் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். இதனால் சல்மான் கானும் மற்ற நட்சத்திரங்களும் கலக்கத்தில் உள்ளனர்.

The post பாலிவுட்டை கதி கலங்க வைத்த பாபா சித்திக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: