சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை புனரமைக்க மாநில அரசு முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் மாணவர் விடுதிகளை புனரமைக்க சமூகநலத்துறை திட்டமிட்டுள்ளது. மாநில அரசின் சமூகநலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் மொரார்ஜிதேசாய், கித்தூர்ராணி சென்னம்மா உள்பட 2 ஆயிரத்து 438 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிகள் உள்ளது. இதில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் படித்து வருகிறார்கள். பெரும்பான்மையான விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அதை கவனித்த சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் எச்.சி.மகாதேவப்பா, மாணவர் விடுதிகளில் சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தரமான அறைகள், படுக்கை, போர்வை, அறுசுவையுடன் கூடிய உணவு, 24 மணி நேரமும் மின்சாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநில நிதியமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவதுடன் சமூகநலத்துறை கீழ் இயங்கி வரும் அனைத்து உண்டு உறைவிட பள்ளிகளும் நவீன தொழில்நுட்ப வசதியில் புனரமைக்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

The post சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை புனரமைக்க மாநில அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: