கொடைக்கானலில் பலத்த மழை கார் மீது ராட்சத மரம் விழுந்தது

*கேரள சுற்றுலாப் பயணிகள் 3 பேர் படுகாயம்

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்திருந்தது. கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் சுமார் 8 செ.மீ. மழை பதிவானது. நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர், தங்களது பயணத்தை முடித்து கொண்டு நேற்று காலை காரில் ஊருக்குப் புறப்பட்டனர். அவர்களது கார் கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மூலையாறு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத மரம் சரிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது.

இதில் காரில் இருந்தவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். இருவர் சிறிய காயங்களுடன் தப்பினர். அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மாற்று வாகனம் மூலம் உடனடியாக வத்தலக்குண்டு அழைத்து செல்லப்பட்டனர். கார் மீது ராட்சத மரம் விழுந்த காட்சி தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post கொடைக்கானலில் பலத்த மழை கார் மீது ராட்சத மரம் விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: