ஒன்றிய அரசு அறிவிப்பு சீன லைட்டர் உதிரி பாகங்களுக்கு தடை: தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு

புதுடெல்லி: பிளாஸ்டிக் சீன லைட்டர்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களுக்கு ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. இதற்கு தென் தமிழக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அதிலும் கோவில்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித்தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது.

எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் உதிரி பாகங்களுக்கு ஒன்றிய அரசு நேற்று தடை விதித்தது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post ஒன்றிய அரசு அறிவிப்பு சீன லைட்டர் உதிரி பாகங்களுக்கு தடை: தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: