தமிழ்நாடு அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா திணறல்

கோவை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்திருந்த தமிழ்நாடு, நேற்று 367 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (சாய் சுதர்சன் 82, நாராயண் ஜெகதீசன் 100, பாபா இந்திரஜித் 40, பிரதோஷ் ரஞ்சன் 49, ஆந்த்ரே சித்தார்த் 38, முகமது 26*).

சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 24 ஓவரில் 6 மெய்டன் உள்பட 61 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். டோடியா 2, வோரா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 164 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி, குர்ஜப்னீத் சிங்கின் இடது கை வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

அந்த அணி 14.2 ஓவரில் வெறும் 16 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. 3ம் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பு 35 ரன் எடுத்துள்ளது (25 ஓவர்). அர்பித் வாசவதா 15 ரன், ஷெல்டன் ஜாக்சன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, இன்னும் 129 ரன் பின்தங்கியுள்ள சவுராஷ்டிரா இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. இன்று 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

The post தமிழ்நாடு அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா திணறல் appeared first on Dinakaran.

Related Stories: